தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, May 12, 2018

இருளினுள்ளிருந்து எழுக - புதுவை இரத்தினதுரை

இருளினுள்ளிருந்து எழுக - புதுவை இரத்தினதுரை
http://www.subamangala.in/archives/199405/#p=42

எழுக என் தங்காய்! எழுக என் தங்காய்!
இருளினுள் ளிருந்து எழுக என் தங்காய்!
மலையென நிமிர்க! மலையென நிமிர்க!
மாதவப் பேறே! மலையென நிமிர்க.

காலப் பெருவெளியில் கரி படர்ந்த ஓவியமாய், நீளும் திசையெங்கும் நீ கிடந்தாய்.
வரிசங்கம்
ஊதி, உனையெழுப்ப ஒருவரின்றி
நீள் துயிலில். பாதி விழிதிறந்தும் பார்க்காமல் கிடக்கின்றாய். வெயிலில் உலர்ந்த விறகாகி
அடுப்பெரிப்போர் கையில் அகப்பட்டு கரியாகிப் போகின்றாய். கண்ணிருந்தும் குருடானாய்
வண்ண மொழியுதிரும் வாயிருந்தும்
ஊமையெனப்
பேச்சிழந்து நிற்கின்றாய்.
பெண்ணே ! என் தங்காய்!
மூச்செழுந்தே வையமுகடை உடைக்கவல்ல
வீரியத்தைக் கொண்ட வீசுபுயலே!
உனது
பேரியக்கம் புரியாமல்
போட்டபடி கிடக்கின்றாய்.

எழுக என் தங்காய்! எழுக என் தங்காய்!
இருளினுள்ளிருந்து எழுக என் தங்காய்!
மலையென நிமிர்க! மலையென நிமிர்க!
மாதவப்பேறே! மலையென நிமிர்க!
கத்தரிக்காய் பொரிப்பதற்கா கையுனக்கு?
பிள்ளையது,
தொத்திக் கிடப்பதற்கா தோளுனக்கு?
நீர்க்குடங்கள்
இட்டு சுமப்பதற்கா இடையுனக்கு?
இல்லையடி
தூளிடித்து,
மாவிடித்து,
சூடை மீன் குழம்பு வைத்து,
பாழிருட்டில் தூங்கும் பழக்கமதை விட்டுவிட்டு
சிங்கவேட்டைக்கு சிலிர்த்தெழும்பி வந்துவிடு.
தும்பி பிடிப்பதற்கே
துணிவிலாப் பெண்களென
எள்ளி நகைப்பவரை ஏளனங்கள் செய்துவிட்டு
புள்ளியெனச் சுற்றும்
பூமி யினை வெற்றி கொள்ளு,

எழுக என் தங்காய்! எழுத என் தங்காய்!
இருளினுள் ளிருந்து எழுக என் தங்காய்!
மலையென நிமிர்க! மலையென நிமிர்க!
மாதவப் பேறே! மலையென நிமிர்க!
பார்; இந்த வையப் பரப்பெல்லாம்
எம்மண்ணின்
கூர் மழுங்கா வீரக்குரல் கேட்கும் நேரமிது.

விடுதலைப் பண்பாடி
விரித்த சிறகொடு கால்
எட்டி மிதித்து, எதிரி முகாம் மீதெழுந்து,
தொட்டசைத்து,
அங்கே தீமூட்டும் கைகளெவை?
உன் தங்கை கைகள் உலகத்தை அசைக்கிறது 
கண் திறவாய் நீயும்
காலெடுத்து வெளிவருவாய்.

எழுக என் தங்காய்! எழுக என் தங்காய்
இருளினுள்ளிருந்து எழுக என் தங்காய்
மலையென நிமிர்க! மலையென நிமிர்க!
மாதவப் பேறே! மலையென நிமிர்க!

வீதி விளக்குகளும்
விடியாமல் போன
மூன்று வருடங்களுக்குப் பின்னர்.
இன்று ,
நட்சத்திரங்களையும் மேகம் மறைத்துவிட
இருளே தடுமாறும் இருட்டு.
அடிமைச் சுகமே அற்புதமென்று
அடங்கிக் கிடக்கும் தமிழனைப் போல
வெளிச்சம் அற்றுப் போனதை மறந்து
இருட்டில் வாழப் பழகிய முகங்கள்.
நாளைப் பொழுது எப்படிக் கழியும்,
என்றே எண்ணி
ஏங்கியபடியே
இருட்டில் இருந்து இருமும் கணவன்,
பஞ்சு விளக்கில் படிக்கும் பிள்ளைகள்,
பழைய கறியை கொதிக்க வைக்க
மூட்டிய அடுப்பு வெளிச்சம் தன்னில்
முட்டை விற்று ,
முருங்கைக்காய் வாங்கிய
வரவு செலவைப் பார்க்கும் மனைவி.

மாசிமாதப் பனிக்கு
வாயில்
பொருக்கு வெடித்த மாதிரியாக
வெடித்துப் பிளந்த எங்கள் வீதியில்
மனிதச் சுமைகளைச் சுமந்து சென்று
கிளாலிக் கரையில்
கொட்டிய பின்னர்
ஊரின் அயர்ந்த உறக்கம் கலைத்து
'மண்ணெண்ணை ' குடித்த
மோட்டார் சைக்கிள்
உறுமிக்கொண்டு ஓடிச் செல்லும்.
சப்பான்காரன் பார்த்தால்
விரலை வாயில் வைத்து அதிசயப்படுவான்
பெட்ரோல் விற்கும் அரபுக்காரன்
வயிற்றில் அடித்து
மயக்கம் அடைவான்.
பட்டணம் சென்று படிக்கும் பொடியன்
படிப்பு முடிந்து திரும்பும்போது
இருண்டு கிடக்கும் வீதியில்...

அவர்கள்
'போரம்மா' என்று பாடிக்கொண்டு
போவதைப் பார்க்க மனசு நிறையும்.
தூரத்தில்
துப்பாக்கி வெடிக்கும் சப்தம்,
எறிகணை விழுந்து வெடிக்கும் அதிர்வு
பண்டத் தரிப்புப் பக்கம்
இராணுவம்
நகருவதாக 'வாக்கி' கதைக்கும்.
ஆங்காங்குள்ள முகாம்களிலிருந்து
'பிள்ளைகள்' ஏறிப் போகும் வாகனம்
வீதியில் இரைந்து மெல்ல மறையும்.
ஆயினும் எந்த அச்சமுமின்றி
இருட்டில் மக்கள் இருப்பர்,
சிரிப்பர்.

இருட்டில் இருந்தும் எங்கள் தாயகம்
இருப்பை இழந்து போய்விடவில்லை
எந்த நெருப்பும் எம்மைச் சுட்டு
எரித்திட முடியாததென்பதை அறிவோம்.
இருட்டில் இருப்பது விடியலுக்காகவே
விடிவே விடுதலை என்பது சத்தியம்
இருட்டில் இருந்தும்
இருட்டைத் துடைப்போம்
இருகை விலங்கை இன்றே உடைப்போம்.
சூரிய வெளிச்சம் சுதந்திரமானால்
நாளை எங்கள் மண்ணின் மேலே
சூரியன் வருவது நிச்சயம்
நிச்சயம். -

புதுவை இரத்தினதுரை 'நினைவழியாத நாட்கள்''