தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, September 04, 2016

‘ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், - ப. சிங்காரம்


“When the wound stops hurting what hurts is the scar”


ப. சிங்காரம் - பகுதி 2

....... .  ஓரு சிறு பகுதி


http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/ 2016/09/04/ப.-சிங்காரம்---பகுதி-2/article3610795.ece

புயலிலே ஒரு தோணி’ கதை, இரண்டாவது உலகப் போர்க் காலத்தையொட்டி மலேயா - இந்தோனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள படைப்பு. யுத்த காலத்தை அந்தப் பிரதேசத்தில் கழித்த சிங்காரம் அதைத் தன்னுடைய நாவலுக்குக் களனாக அமைத்துக் கொண்டார். ‘புயலிலே ஒரு தோணி’யை நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இடையில் ஊடாடும் ஒரு நாவலாகக் கொள்ளலாம். நவீனத்துவ நாவல் ஒரு மையப் புள்ளியைச் சுற்றி இயங்குகிறது. பின்நவீனத்துவ எழுத்து அந்த மையத்தை நிராகரிக்கிறது; கலைத்துப் போடுகிறது. பல்வேறு திசைகளிலிருந்தும் பல்வேறு குரல்கள் கிளம்பிப் பெருகி ஒருவித ‘கலகச்’ (anarchic) சூழலை உருவாக்குவதே பின்நவீனத்துவ எழுத்து. ‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதான பாத்திரமான பாண்டியனையும், அவனது எக்ஸிஸ்டென்ஷியல் தருணங்களையுமே இந்த நாவலின் மையமாகப் பார்த்து அதை ஒரு நவீனத்துவப் படைப்பாகக் கருதி விட்டது தமிழ் இலக்கிய உலகம். நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான ஒரு முக்கியமான வித்தியாசம், நவீனத்துவம் வாழ்வின் அவலங்களைக் கோபத்தோடும் துயரத்தோடும் நையாண்டி செய்கிறது என்றால் பின்நவீனத்துவம் அந்த அவலங்களைப் பகடி செய்கிறது. ஆங்கிலத்தில் முன்னதை satire என்றும், பின்னதை burlesque என்றும் சொல்லலாம். சார்லி சாப்ளினின் ‘க்ரேட் டிக்டேட்டர்’ படத்தை நையாண்டிக்கு உதாரணமாகச் சொல்லலாம். நையாண்டியின் நோக்கம், ஒரு விஷயத்தைக் கேலி செய்வதல்ல; விமரிசனம் செய்வது. ஆனால் burlesque, விமரிசனம் செய்வதில்லை; மாறாக, ஒரு மகத்தான படைப்பை எடுத்துக்கொண்டு கிண்டல் செய்கிறது. மகத்தானதென்றும் புனிதமானதென்றும் அது எதையும் விட்டு வைப்பதில்லை. Burlesque என்பதன் அர்த்தங்களில் ஒன்று, ஸ்ட்ரிப் டீஸ் நடனம். அதையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். கிராமங்களில் ஒருத்தனை மற்றொருத்தன் கிண்டல் செய்து விட்டால் ‘டவுசரை அவுத்துட்டான்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதுதான் burlesque. சிங்காரம் ஏன் இதைச் செய்கிறார்? தனக்கு முன்னே தென்படும் எந்த ஒரு விஷயத்தையும் புனிதப்படுத்தி அதை வழிபடுவதுதான் பன்னெடுங் காலமாக தமிழ் மரபாக இருந்து வருகிறது. அதனால்தான் அந்தப் புனிதங்கள் அனைத்தின் ‘டவுசரையும்’ அவிழ்க்கிறார் சிங்காரம். நாவல் முழுவதுமே அதற்கு உதாரணம் என்றாலும், ஒரு கட்டத்தில் பாண்டியன் கடுமையான போதையில் இளங்கோ அடிகளை வம்புக்கு இழுக்கும் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளைத் தருகிறேன்:


‘ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன். இப்பொழுதுதான் தங்களை நினைத்தேன். தாங்களோ சட்டியும் கையுமாய்ச் சாலையோரம் நிற்கிறீர்கள். சட்டியில் ஒன்றையும் காணோமே, ஏன்?ஹெஹ் ஹெஹ் ‘இருக்குமிடந்தேடி’ வந்து ‘உருக்கமுடன்’ அன்னமிடுவார் யாரும் சிக்கவில்லையாக்கும்? ஏஞ்சாமி-சாமி, சின்னப்பயல் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - கலி காலத்தில் இந்த விரதமெல்லாம் கடைத்தேறுமா? தெருக்காட்டுக்குள் போய் ஆடிப் பாடி இரந்தால்தான் சோற்றைப் பார்க்கலாம். சோறு வேண்டுமாயின் தயவுசெய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். முதலில் கெசாவனுக்குப் போய்ப் பூப்போட்ட சட்டை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். தாடி இருந்து விட்டுப் போகிறது. லேசாய் வெட்டி விட்டால் போதும். அரிதாரம் இல்லையோ? வேண்டாம். விபூதியை முகத்தில் அப்பிக் கோவணத்தால் தேய்த்து விடுங்கள். பவ்டர் பூசியது போலவே இருக்கும். சரி, என்னென்ன சினிமாப் பாட்டு தெரியும் உங்களுக்கு? என்ன, ‘பெண்ணே வா வா வா! இன்பம் தா தா தா!’ கூடத் தெரியாதா...? கதை-வசனம் பேசத் தெரியுமா? தெரியாது. பேடிக் கூத்து ஆடத் தெரியுமா? அதுதான் சாமி, குண்டியை ஆட்டிக் குதிப்பது... அதுவும் தெரியாது!... நிற்க. தங்களிடம் ஒரு சேதி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் வீட்டு வகையில் யாரேனும் இப்போது அங்கே தொழில் நடத்துகிறார்களா? இல்லையா? ஆ, எப்பேர்ப்பட்ட மார்க்கா! இருந்த இடம் தெரியாமலா போய் விட்டது! கோவன்னா அவர்கள், பெண்டாட்டி தாலியை விற்க மதுரைத் தெற்காவணி மூலவீதிக்குப் போயிருந்த இடத்தில் - இல்லையில்லை, தாலியில்லை, தண்டை, அதுதான் சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் அநியாயமாய்க் கொலையுண்டாராமே, பிள்ளை வைக்கக் கூட கொள்ளி இல்லாமல் - மன்னிக்கவும், நாக்குழறுகிறது. பிள்... ம்ம்... கொள்ளி வைக்கக் கூடப் பிள்ளை இல்லாமல் கண்ணகியாத்தாளும் மலைக்காட்டில் போய் மாண்டு போனார்களாக்கும். ஐயோ, பாவம்! கணவனிடம் தண்டையைக் கழற்றிக் கொடுப்பானேன், விடாப்பிடியாய் அவனைப் பின்பற்றிப் போய் அறியாத் தேயத்தில் அநாதையாய்ச் சாவானேன்? ம்ஹ்ங்... கோவன்னா அவர்கள் எடுத்து வைத்திருந்த திருக்கடையூர் தாசி மாதவிக்கு ஒரு மகள் பிறந்திருந்ததாகவும் - அந்தத் தங்கச்சி பெயர் மணிமேகலை என்றார்கள் - அதுவும் பருவ வயதில் துறவறம் பூண்டு சாக்கிய மடத்தில் போய் ஒடுங்கி விட்டதாகவும் சொல்கிறார்களே, உண்மைதானா? ம்ஹ்ங்... கோவன்னா அவர்களின் மாமனார் எட்டி மாநாய்க்கன் வீடும் கொடியற்றுப் போனதாக்கும்... ஏஞ்சாமி, இதெல்லாம் ஏனிப்படி...? ஆ! அப்படியா? அது சரி, இன்னொரு சங்கதி. வீடு கசந்த பின் தாங்களும் திருக்கடையூருக்குத்தான் போனீர்களோ... என்ன பெயர்? திருவுடைநாயகி! நல்ல பெயர், மணியான பெயர்... ம்ம்? மூன்று மாதத்தில் புளித்து விட்டதாக்கும். பிறகு மாமல்லை, நாகை, கொற்கை... தொழிலைக் கவனிக்க நேரமில்லை. மேலாளும் அடுத்தாட்களும் சேர்ந்து பட்டை நாமம் போட்டார்கள். கடை நொடித்து விட்டது. உடுத்திய வேட்டியோடு, ‘ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல’ என்று பரதேசம் கிளம்பி விட்டீர்கள். இவ்வளவுக்கு ஆகியும் கூடப் பெண்ணாசை அடியோடு ஒழியவில்லையே. ஆமாம், சமயங்களில் நினைவு வரத்தான் செய்யும். அதற்குத்தான் ஒரு இக்கு வைத்துப் பாடியிருக்கிறீர்களே,

நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல

விலை மாதருண்டிந்த மேதினியில்

என்று. அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்ப புத்தி! ஏஞ்சாமி, விலைமாதர்தான் தங்களுக்குப் பிடிக்குமாக்கும்... கொல்லைப்புற மாங்கனிகளில் விருப்பம் இல்லையோ?’

.......






Tuesday, December 30, 2014


இமையத்தின் சிறுகதைகள் திறக்கும் சாளரங்கள்


“சாவு சோறு”, இமையம், சென்னை, க்ரியா, 2014, பக்கங்கள் 160; விலை ரூபாய் 170; ISBN 978-93-82394-11-2

    இமையம் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளிலேயே ஆகச் சிறந்த எட்டு கதைகளின் தொகுப்பாக “சாவு சோறு” வெளிவந்திருக்கிறது. தலைப்பு “சாவுச்சோறு” என்று ஒற்றுப்பிழையின்றி இருந்திருக்க வேண்டும்; இதுதான் போகிறது என்றால், உள்ளடக்க பக்கத்தில் தலைப்புக் கதையின் பெயர் “சாறு சோறு” என்று பிழையுடன் அச்சாகியிருக்கிறது. க்ரியா பதிப்பகம் மெய்ப்பு திருத்துவதற்கும், புனைவுகளை திருத்துவதற்கும் பெயர்போன பதிப்பகமாயிற்றே தலைப்புகளே இப்படி பிழைகளுடன் இருக்கின்றனவே என்ற எரிச்சலுடனே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன் நல்ல வேளையாக கதைகள் ஏமாற்றவில்லை அதன் பிறகு வேறு பிழைகளும் (இருக்குமானால்) கண்ணில் படவில்லை.

    வளங்களும் வகைமைகளும் மிகுந்த தமிழ்ச் சிறுகதை வடிவத்தில் என்ன பங்களிப்புகளைச் செய்கின்றன இமையத்தின் சிறுகதைகள்? புதுமைப்பித்தனும், ஜி.நாகராஜனும் ‘பார்ப்பதை பார்த்துக்கொள், கேட்பதை கேட்டுக்கொள்’ என்று நிர்த்தாட்சண்யமாய் தமிழ் சமூகத்தின் எந்த யதார்த்தத்தின் சாளரங்களைத்  திறந்துவிட்டு நின்றார்களோ அதே சாளரங்களைத்தான் இமையமும் அதே நிர்த்தாட்சண்யத்தோடு திறக்கிறார்.ஆனால் அவர் புதுமைப்பித்தனை போல கதை மாந்தர்களைப் பற்றியோ கதைச் சம்பவங்கள் பற்றியோ எந்த கருத்தையும் சொல்வதில்லை ஜி.நாகராஜனைப் போல பங்கேற்பின்மையின் அலட்சியத்தோடு நிற்பதுமில்லை. இமையம் திறக்கின்ற யதார்த்தத்தின் சாளரங்கள் வழி, உண்மையில், நாம் பார்ப்பது குறைவு, கேட்பது அதிகம். இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளிலுமே கதை மாந்தர்கள் தங்கள் சுயவரலாறுகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மற்றவர்களிடம் சொல்கிறார்கள். வாசகர்களாகிய நாம்  தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியைக் பார்ப்பவர்கள்/கேட்பவர்கள் போல அவர்களின் சுயவரலாறு கூறுதலை நாமும் கேட்கிறோம். எட்டு கதைகளில் விதவிதமான சுய வரலாறு கேட்கும் சந்தர்ப்பங்கள்.

    தலைப்புக் கதையான ‘சாவு சோறு’ கதையில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாய் தன் மகள் அம்சவள்ளியைத் தேடிச் செல்லும் மூதாட்டி பூங்கோதை தான் சந்திக்கும் கமலா என்ற ஒரு பள்ளிக்கூட துப்புறவுத் தொழிலாளியிடம் தன் கதையைச் சொல்கிறால். இருபத்தைந்து பக்க கதையில் இந்த உரையாடல் கதை சொல்லல் பதினோராவது பக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது. அதுவரை அவல் பள்ளிக்கூட வாசலில் நிற்றல், ஆட்டோ பிடித்து கமலா வேலை செய்யும் பள்ளிக்கு வந்து சேர்தல் என்று கதை நகர்கிறது. கமலாவுக்கும் ஏகப்பட்ட வேலைகள் அவளும் ஏதோ ஒரு கண பரிதாபத்திலேயே பூங்கோதையை மரத்தடியில் உட்கார வைத்து உரையாட ஆரம்பிக்கிறாள். பூங்கோதை சொல்வதோ நெஞ்சை உலுக்கும் கதை. பூங்கோதையின் மகள் வேறு சாதிக்காரனை காதலித்தது விபரீத சண்டையாகிவிட அவளுக்கு பூங்கோதை குடும்பம் அவள் உயிரோடு இருக்கும்போதே கருமாதி செய்துவிடுகிறது; அந்த சாவுச்சோறையும் சாப்பிட்டுவிட்டே பூங்கோதை மகளைத் தேடி அலைகிறாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுகிறது. கதையை கமலாவைப் போலவே நாமும் கேட்கிறோம். கதையைக் கேட்ட கமலா சொல்கிறாள் :” இந்த நெலமயில நீ இங்க வந்தது மகா தப்பு. கிளம்பு. ஊட்டுக்குப் போயி சேரு. முலய அறுத்திட்டாங்க. மொட்ட அடிச்சிடாங்கன்னு சொல்ற. எனக்கு பயமா இருக்கு.சேதி கெடச்சா சொல்றன். முதல்ல நீ ரோட்டுக்குப் போயிடு” கமலாவின் எதிர்வினையைப் போன்றதாகத்தான் நம்முடைய வாசக எதிர்வினையும் இருக்குமா? பூங்கோதை சொல்கிறாள்: “அவனுகளா அவள வவுத்துல வச்சியிருந்தானுவ? அவனுவுவளா அவளுக்கு பாலு கொடுத்தானுவ? பீ, மூத்தரத்த அள்ளிக்கொட்டுனானுவ? அவளோட பீ மூத்தரத்துணிய அலசிப்போட்டானுவ? என் வவுத்திலிருந்து வெளியே வந்து பூமியில வியிந்ததிலிருந்து அவனுவுவளா அவ கூட படுத்திருந்தானுவ? அவளுக்கு அவனுவவளா உசுர கொடுத்தானுவ? அவளுக்கு நாந்தான சீவி வுட்டன். சீல கட்டி வுட்டன். அவ தீட்டுத்துணிய நாந்தான அலசிப்போட்டேன். எல்லாக் கருமாதியயயும் நாந்தான செஞ்சன்? அதனால தான் அலயுறன்”. பூங்கோதை எழுந்து பித்திச்சி போல நடக்க, கமலா பள்ளிக்கூடத்தின் ‘குளோசிங்’ மணியை அடிக்க, கதையும் முடிந்துவிடுகிறது.

    சுய வரலாறு என்ற இலக்கிய வடிவம், கேட்கும் சூழ்நிலைகளில் என்ன மாதிரியான பொறுப்புணர்வைத் தோற்றுவிக்கின்றனவோ அதற்கு நிகரான சக மனிதனின் கதைக்கான பொறுப்புணர்வினையே வாசிக்கும்போதும் தோற்றுவிக்க வேண்டும். தலித் இலக்கியம் அகில இந்திய அளவில் பரவிய முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டவை பெரும்பாலும் நிஜமான சுய வரலாறுகளே என்பது இங்கே நினைவு கூரத்தக்கது. தேசத்தலைவர்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோரின் சுய வரலாறுகளும் அந்த வடிவத்தைக் கொள்வதனாலேயே வாசிப்போரின் அகமாற்றத்தினையும் சகமனிதனுக்கான பொறுப்புணர்ச்சியையும் உண்டாகத்தக்க வல்லமை உடையதாக இருக்கின்றன. ஆனால் ஏழை எளிய மனிதர்களின் சுய வரலாறுகளைக் கேட்கும் பொறுமையும் அதைத் தொடர்ந்து எழுகின்ற பொறுப்புணர்ச்சியையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? கதையில் வரும் கமலாவைப் போல கதை கேட்டு முடிந்தவுடன் ‘குளோசிங்’ மணியை அடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கக்கூடியவர்கள்தானா நாம்?

    இல்லை, சுய வரலாறு ஒன்றினைக் கேட்பது என்பது ‘திருட்டுப் போன பொண்ணு’ கதையில் வருவது போல வேறு யாருக்கோ அந்நியருக்கு நடந்த துயர சம்பவங்கள் என ஆவணப்படுத்துவதற்குரிய மானுடவியல் தருணங்கள் மட்டும்தானா? ‘திருட்டுப் போன பொண்ணு’ கதையில் அமெரிக்காவிலிருந்து கதை சேகரிக்க வரும் மானிடவியலாளன் டேவிட்டிற்கும் அவனுடைய உள்ளூர் உதவியாளனுக்கும் திருட்டுப் போன பெண் தன் சுய வரலாற்றினை  சொல்கிறாள். வயதுக்கு வந்த போது வேறொரு பெண் என்று நினைத்து மாமன்காரன் கூட்டம் ஒன்று அவளைத் திருடிச் சென்றுவிட்டு ஆள் மாறாட்டம் தெரிந்தவுடன் அவளை விட்டுவிட்டுப்போய்விடுகிறது. திருடு போனதால் பட்டப்பெயர் பெறும் அவளுக்கு மண உறவிற்கான தெரிவுகளே இல்லாமல் போய் தனிக்கட்டையாய் இருப்பதை அவள் தன் வரலாறாய்க் கூறுகிறாள். தன் வீட்டுக்கு வழி காட்டும் பெண்ணிடம் “போயி எவனாயாவது புடிச்சிவச்சிக்க இல்லன்னா ஒம் பூட்டுக்குத் தொறக்கோலு கெடைக்காது” என சொல்வதில் ஆரம்பித்து பொண்ணு கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பாலியல் இச்சையைக் கொண்டிருக்கும் நகைச்சுவையை வெளிப்படுத்துகிறாள்.   தேவமார் சாதியைச் சேர்ந்த பாண்டி என்பவனோடு அவளுக்கு ஏற்பட்ட ‘இது’வைச் சொல்லும்போது “தேவமாரு பெரும் கூட்டம். அடிதடி வெட்டுக்குத்துக்கு அஞ்சாத சாதி. எங்க எனம் அப்படியில்ல. தெனம் ஒரு ஊருக்குப் போற கூட்டம். எங்க ஆளுவோ சண்டைக்கு போவ மாட்டாங்க. வலுவில்லாத கூட்டாம். நாடோடிதான?”  என்பதிலிருந்து தன் சாதியான கம்பளத்து நாயக்கர் சாதியில் “ தோக்கலவாரு, சில்லுவாரு, ஒட்ட நாயக்கரு, தொட்டி, பசாலின்னு மொத்தம் ஒம்போது இருக்கு. ‘ஒம்பது கம்பளத்தாரையும் விளங்கிடச் செய்வா ஜக்கம்மா’ன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த ஒம்போதுல ஒண்ணுதான் கட்டபொம்மு” என்று சொல்வது வரை மானிடவியல் தரவுகள் கதை முழுக்க விரவிக்கிடக்கின்றன. ‘திருட்டுப் போன பொண்ணு’ போன்ற சுய வரலாறுகளைக் கேட்டு அகம் நெகிழாத சமூகத்தில் அவள் தனிமையில் அனாதையாய் இறப்பதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும். “கனிஞ்சபழம் அயிவிப்போயிடும் இல்லியா? அதான் எங்கதெ. பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். மருமகளா, நாத்தனாரா, கொழுந்தியாளா, பாட்டியா ஆவ மாட்டன். மன்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்கமாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலயெழுத்து, என்னோட கவல. நாந்தான் அழுவணும். இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்” என்று பொண்ணு சொல்வதோடு கதை முடிகிறது.

    சுயவரலாறுகள் அனைத்துமே மானிடவியல் தரவுகளாக மட்டுமே மதிப்பு பெறும் சமூகத்தில் ஒரு வேளை அவை கடவுளிடம் மட்டுமே சொல்லத் தகுந்தவையோ? இமையத்தின் ‘ஆகாசத்தின் உத்தரவு’ கதையில் திருடன் ஒருவன் குல சாமியிடம் தன் கதையைச் சொல்கிறான். திருடன் ‘ஆகாச வீரன்’ என்ற சாமியின் பெயரால் ‘ஆகாசம்’ எனப் பெயரிடப்பட்டவன். ஆகாசவீரன் திருடனை முன்னொரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றியிருக்கவில்லை.”அன்னிக்கி வாங்குன அடிய நெனச்சா இப்பியும் வலிக்குது. கூட்டத்திலிருந்து என்னெக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங்காலுக்கு ஓடுறதுக்கு தெம்பக் கொடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு குலசாமின்னு இருக்க? ஆகாசவீரன்னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வச்சான்?” என்று புகார் சொல்வதில் ஆரம்பிக்கிறது திருடனின் கதை. அவனுடைய கவலை “இதென்ன பழய காலமா? சோளக்கதிர அறுக்கிறது. நெல்லுக் கதிர அறுக்கிறது பூசிணிக்காய, பரங்கிக்காய அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கறதுக்கு. இப்பத்தான் எல்லா பயளுவுளும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேர்ந்து கதிர அறுத்தாந்து சோறு திங்குறது? கோழி திருடறது, ஆடுமாடு திருடறது, மோட்டார் கொட்டாயில கரண்டு கம்பி திருடறதுன்னு எல்லாம் செஞ்சி பாத்தாச்சி. எல்லாம் ஒரு வார சோத்துக்குகூட தேறமாட்டேங்குது” என நீள்கிறது. ஆனால் அவனுக்கு ஆகாசவீரனை விட்டால் வேறு கதியில்லை. வேப்பிலைகளைப் பரப்பி சகுனத்திற்காகக் காத்திருக்கிறான். கிடைத்த சகுனம் நல்லதுதான் என்ற நம்பிக்கையில் திருடக் கிளம்பிச் செல்கிறான்; அவனை ஆகாசவீரன் கைவிட்டானா காப்பாற்றினானா என்று நாம் அறிவதில்லை.
    பேயாய் மாறி, பேய்பிடித்தவளின் வழி, பேயோட்டிக்கும் சமூகத்திற்கும் தன் வரலாறைக்கூறுதல் நிச்சயம் குவார்ட்டர் பிராந்தி பெறுமளவு பயனளிக்கக்கூடியது. ‘பத்தினி இலை’ கதையின் முதல் பத்தியே முழுக்கதையும் சொல்லிவிடுகிறது: “கண்ணாலத்துக்கு மின்னாடி நம்ப மேற்காலத் தெரு ஒத்தக் கண்ணன் மவ தனசெல்விய வச்சியிருந்தன்னு யாரோ ஊருல காயடிச்சிவுட்டிருக்காங்க. அதெக் கேள்விப்பட்டு, தாலி கட்டுண மூணாம் மாசத்திலிருந்து கோலம் கட்டி அடிக்கறா. ஊர சிரிக்க வைக்கிறா. ஊருல என்னெப் பங்கப்பட வைக்கனும். அவ ஆச. அதுக்குத்தான் இந்தப் பேயி புடிச்சிக்கிச்சிங்கிற கூத்து”. சேகரின் மனைவியின் மேல் இறங்கியிருக்கும் தனசெல்வியின் பேயை நொண்டிக்கருப்பனை வைத்து அடக்க முயற்சிக்கிறான் பேயோட்டி. பேய் குவார்ட்டர் பிராந்து வாங்கிக் குடித்துவிட்டு ஊரில் உள்ள அத்தனை கள்ளத் தொடர்புகளையும் தன் கதையோடு சேர்த்து அம்பலப்படுத்திவிடுகிறது.

    ஊளை, புலம்பல், ஒப்பாரி என்று மட்டுமே இருக்கும் இமையத்தின் முந்தைய கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டு ஆழ்ந்த நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன ‘பத்தினி இலை’யும் ‘ஆகாசத்தின் உத்தரவு’ம். ‘சாவு சோறு’, ‘திருட்டுப் போன பொண்ணு’ கதைகளிலும் தன் வரலாறு சொல்வதற்கு பின்னால் இருக்கும் இழிவின் நிர்ப்பந்தத்தைப் பார்த்து நகைப்பது கதைகளின் அடிநாதமாய் இருக்கிறது.

    ‘வரம்’ கதையில் தன் கதையை கடவுளிடம் சொல்லி அழுவதற்கான கடும் சூழ்நிலை பெரியநாயகத்திற்கு இருக்கிறது. வேடப்பசாமியின் முன்னால் கதறும் பெரியநாயகம் “நெருப்பு எரியுறாப்ல என் நெஞ்சு வேவுதே அது கூடமா ஒனக்குத் தெரில? சொந்த பெரியப்பன் மவன்கூட ஓடிப்போய்ட்டாளே. அம்மாம் மதாச்சாரமா? ‘அவ பொச்சில நெருப்ப வாரிக் கொட்ட, மத்து கழியால குத்த’ன்னு சனங்க சொல்ற சொல்ல என்னால கேக்க முடியல. ஊசியால குத்துறப்புல இருக்கு. உசுரு போறாப்ல இருக்கு. எனக்கு வாய்ப்பூட்டு போட்டு ஊமையாக்கிப்புட்டியே. மூணு நாளா நான் செத்துப் போயிருப்பன். நான் சாவக்கூடாது. நான் சாவ மாட்டன். அவ சாவணும்” என்று தன் மகள் சாக வரம் கேட்கிறாள். பெரியநாயகம் சாவதற்கு வரம்தான் கேட்கிறாள் ‘பரிசு’ கதையிலோ ராமசாமி சாகவே துணிந்துவிடுகிறார். இத்தனைக்கும் ராமசாமிக்கு பெரியநாயகம் அளவுக்கு நெருக்கடியான சூழ்நிலை இல்லை.

    வாத்தியார் வேலையில் ஓய்வு பெற்றபின்பு அவரிடம் இருக்கும் சேகரநிதியை பேரக்குழந்தைகளுக்கு செலவழிப்பதில்லை என்ற மருமகளின் புகார்களில் மனம் கசந்துவிடும் ராமசாமி தன் அண்ணன் மகளிடம் தன் முழு சுய வரலாற்றினையும் சொல்லிவிட்டு, சேமிப்பு பணத்தை மகனுக்கும் மருமகளுக்கும் பரிசாக கொடுத்துவிட்டு சாகச் செல்கிறார். “பூங்காவனத்தையும் வண்ணாண் வீட்டையும் கைவிட்டுவிடாதே”,  “நம்ம ஊட்டு வாசல்ல அன்னம் கேட்டு ஏனத்த நீட்டுனவங்களுக்கு இல்லைன்னு மட்டும் சொல்லிடாத.’இப்படியாப்பட்ட புள்ளயவா நீ பெத்த’ன்னு எமன் என்னெ செக்குல போட்டு ஆட்டி சித்ரவத செய்வான். சாட்டயால அடிப்பான். பல்லிகுழில, அரணக் குழில தள்ளிடுவான்’ என்ற அம்மாவின் இறுதி அறிவுரைகள் நினைவுக்கு வர அவற்றையும் நிறைவேற்றிய பின்னரே ராமசாமி சாகச் செல்கிறார். இது போல எல்லா கதைமாந்தர்களுமே அறுபடாத பாசப்பிணைப்பில் கட்டுண்டிருக்கிறார்கள். பல கோர துன்பங்களுக்குப் பின்னரும் பாசத்தின் தளைகள் தளறுவதில்லை.

    ‘ராணியின் காதல்’, ‘பேராசை’, ‘அரசாங்கப் பள்ளிக்கூடம்’ ஆகிய மூன்று கதைகளிலும் இதர ஐந்து கதைகளைப் போல கதாபாத்திரங்கள் தன் சுய வரலாறு கூறுதல் இல்லை. ‘ராணியின் காதல்’ கதையில் ராணியும் ராஜாவும் ஒரே சாதி, ஒரே தெரு. ஒன்றாகவே படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் காதல் நிறைவேறுவதில்லை. ராணி வேறொருவனுடன் மணமாகி பிள்ளைகள் பெற்று பல வருடங்கள் கழித்து ராஜாவை சந்தித்து கடன் கேட்கிறாள்.  அவனோடு லாட்ஜ் தவிர வேறெந்த இடத்திற்கும் கூடச் செல்ல தயாராயிருப்பதாகச் சொல்கிறாள். ராஜா தன் கழுத்து செயினை அடமானம் வைத்து அவள் கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறான். ராணியின் காதல் இப்படி இருக்கிறதென்றால் கோகிலாவின் ‘பேராசை’ தனியாக கழிப்பறை இருக்கக்கூடிய வீட்டு வசதியுள்ளவனை மணமுடிக்கவேண்டும் என்பதாக இருக்கிறது. கூட்டாக, கிராமத்தின்  திறந்தவெளியில் மலம் கழிப்பதில் அவள் அருவருப்படைகிறாள். எல்லா கிராமத்து வரன்களையும் நிராகரிக்கும் அவள் அரசாங்க வேலையில் இருக்கும் செல்வமணியை குடும்பத்தாரின் அறிவுறுத்தல்களையும் மீறி மணம் முடிக்கிறாள். கூவத்துக்கு அருகே மூன்று பாய் அளவு மட்டுமே இருக்கக்கூடிய குடிசையையும், ஒன்பது குடித்தனங்களுக்குப் பொதுவாய் இருக்கக்கூடிய கழிப்பறையையும் பார்த்து கோகிலாவுக்கு அடி வயிற்றிலிருந்து ஆத்திரமும் அழுகையும் பொங்கி வருகிறது. இந்தக் கதைகளையும் நாம் மானிடவியல் தரவுகளைத் தருகின்ற கதைகளாகத்தான் வாசிப்போமா?

    இமையத்தின் கதைகளில் அலங்காரங்கள் இல்லை, உவமான உவமேயங்கள் இல்லை, நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்ற பகுப்பில்லை, ஆனால் வட மாவட்டங்களின் பேச்சு மொழியில் வடிவ நேர்த்தியுடன் கதைகள் சொல்லப்படுகின்றன. அவை சொல்லப்பட்ட முறைகளால் தன் சுய வரலாறுகளை கதாபாத்திரங்களின் வழி சொல்லப்படுகின்ற தருணங்களால் கதைகள் உக்கிரமடைகின்றன; அவற்றை எதிர்கொள்ளும் வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதே கேள்வி.